5. வற்றிய மார்புகள்_தமிழ்க்காதலி தாரணி.

5.
புத்தகம் ..வற்றிய_மார்புகள்
ஆசிரியர் -தமிழ்க் காதலி தாரணி
பக்கங்கள்.. 96

அமேசான் கிண்டிலில் படித்தது. முக நூலில் அறிமுகம்.

தொழிற்சாலைகளால் வறண்டு போன நம் பூமித்தாயினைக் குறிப்பிடுகிறது தலைப்பு. இயற்கையை பாதுகாக்க இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. இடையில் பெண்களின் அக உணர்வுகளையும் எதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். நேசிக்கும் மனிதரை மாற்றுவதோ,மதம் மாறுவதோ தூய அன்பிற்கான தேடல் தான். சரி தவறு என்று சொல்ல படைத்த வராலேயே முடியுமோ? சாந்தி மீது வைத்த பானுவின் அன்பு பிரமிக்க வைக்கிறது.

காப்பர் தொழிற்சாலையினால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் தொடங்கும் கதை. அஞ்சலை என்ற ஜெசியைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது.
அஞ்சலையின் இரு மகள்கள் பானு மற்றும் மைதிலி, மகன் உத்ரா. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர் மூர்த்தி..

எல்லா மதத்திலும் ரிச்சர்டு போன்றோர் இருப்பார்கள் தங்கள் வசதிக்காக ஏமாற்றுவார்கள் என்பதை புரிந்து கொள்ளும் தெளிவு இருந்தால் அஞ்சலை ஏன் ஜெஸ்ஸியாக மாறப் போகிறாள்? விதிவிலக்கான வாழ்க்கை அவளுடையது.வேறென்ன சொல்வது?

காப்பர் தொழிற்சாலையை மூடப் போராடும் மைதிலி, கருணா ஆகியோர் செய்திகளில் நாம் பார்த்த துப்பாக்கி சூட்டை நினைவு படுத்துகிறார்கள்.

தன் சவரத் தொழிலுக்காக குச்சுவல்லி அடித்துவிடும் கதைகள் சுவாரசியம். மக்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்திக் கொள்ளும் அனைவரும் நம் நினைவிற்கு வருகிறார்கள்.

மூடநம்பிக்கை, சமகால அரசியல் , இயற்கை எனப் பல விஷயங்களைப் பேசும் நாவலை வாசிக்கலாம்.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு