13.ராசாத்தி ... சிந்து சீனு

12/07/22
13/50
புத்தகம்... #ராசாத்தி 
ஆசிரியர்... சிந்து சீனு. வகை ...நாவல் .
பதிப்பகம்.. லாவண்யா புத்தகாலயம், வேலூர்.
97905 66619.
பக்கங்கள்..104

 ஆசிரியரைப்பற்றி... 
கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல்வேறு தளங்களிலும் பயணிப்பவர். இவருடைய யார் அவன் ?சாத்கர் அரிசிக்கா போன்ற நாவல்கள் எளிய மனிதனின் வாழ்வியலையும், சுற்றுச்சூழலைப் பற்றியும் பேசுவன.

நூலைப் பற்றி...
தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பினை சுரண்டி முதலாளி வர்க்கம் வாழ்வதைப் போல குடும்பத்திலும் சிலர் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்கிறவர்கள் உண்டு என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது இந்தப் புதினம்.

 மூன்று தலைமுறை வாழ்க்கையை ராசாத்தியை மையமாக வைத்து, எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரித்துக் காட்டுகின்றது.

 பஞ்சமி நிலத்தைப் போராடிப்பெற்ற முருகேசன்- சாந்தா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் சிவனாண்டி .சிறிய வயதிலேயே பொறுப்புணர்ந்து நடந்து கொள்பவன். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும்  தான் தோன்றித்தனமாக இருக்கும் தம்பிகள் சுதர்சனம் மற்றும் பிரகாசம். வயல்வெளிகளில் கூலி வேலை செய்தும் ஆடு மாடுகளை மேய்த்தும் பிழைக்கும் எளிய மனிதர்கள் வாழும் கிராமத்தில் நிலையை கண்முன் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்.

மின்சாரம் கிராமங்களுக்கு அறிமுகமான காலத்தில் சவரிமுத்து ஆசிரியரின் உதவியுடன் எட்டாம் வகுப்பு வரை படித்த சிவனாண்டி தந்தையின் மறைவால் குடும்ப பாரத்தை ஏர்க்கலப்பை உதவியுடன் சுமக்கத் தொடங்குகிறான்.விவசாயிகள் உழைப்பை,வலியை நமக்கும் கடத்துகிறது கதை.

 தாய் வழிச் சமூகத்தில் வளர்ந்த வர்கள் நாம் என்பதை   தாய் சாந்தாவின் கதாபாத்திரம் நினைவூட்டுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் அமைதியான குணத்துடன் கணவனுக்கும் பிள்ளைக்கும் கடைசி வரை துணை நிற்கும் சாந்தா, மருமகளை கவனிக்கும் இடத்திலும் வாசிப்போரின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்.

ராசாத்தி... நான்கு அண்ணன்களுடன் பிறந்து , சிவனாண்டியை மணப்பவள்.வறுமையுடன் வாழக் கற்றவள். குழந்தை பேற்றிற்காக ராசாத்தி எடுக்கும் முயற்சிகள், அண்ணன்களின் உதவி ,மாமியார் சாந்தா ,கணவர் சிவனாண்டி ஆகியோரின் ஆதரவு ஆகியவை நெகிழச் செய்கின்றன.

திருமணம், குழந்தைகள் என தம்பிகள் ஒதுங்கிக் கொள்வது மட்டுமல்லாமல் சொத்தில் பங்கு கேட்பது, உதாசீனப்படுத்துவது என அனைத்திற்கும் பொறுத்துப் போகிறார்கள் சிவனாண்டி -ராசாத்தி தம்பதியினர். 
வாழ்க்கையில் துன்பங்களையே சந்தித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வரமாக ஒண்டிவீரன் என்ற மகன்.பாளையக்காரர் பூலித்தேவன் கிளைக்கதையும் இதில் உண்டு.
ஒண்டிவீரன் படித்து காவலர் பணியில் சேர்ந்து, மேஜர் முகில் பரமானந்தத்தை சந்திப்பதுடன் இந்த கதை முடிகிறது.

பெண் தெய்வக் 
 கோவிலில், பெரியவர் மாங்கல்யம் எடுத்துக் கொடுக்க நடக்கும் சிவனாண்டி திருமணம், ஒண்டிவீரன் திருமணத்தில் தாயை முன்னிலைப்படுத்துவது என முற்போக்கு கருத்துகளை இடையே சேர்த்துள்ளது சிறப்பு.

தான் சந்தித்த நல்ல மனிதர்களின் பெயர்களைக் கதாபாத்திரங்களுக்கு சூட்டி, அவர்களின் மேன்மையான குணங்களை அனைவரையும் அறியச் செய்யும் ஆசிரியருக்கு பாராட்டுகள்.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு