14.புத்து மண்.. சுப்ரபாரதிமணியன்

20.08.22

14/50
#ஆண்டுவிழா_இயற்கை.

புத்தகம்... புத்து மண் (சுற்றுச்சூழல் நாவல்)
ஆசிரியர்.. சுப்ரபாரதி மணியன்.
பதிப்பகம்..நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்..
பக்கங்கள்..133
வகை..நாவல்.

நூலைப் பற்றி..
   சமூகத்தின் பால் அக்கறை கொண்ட, ஏதேனும் சிறு மாற்றமாவது நிகழாதா எனத் தன் முதுமையிலும்  போராடும் மணியன் என்ற போராளியைச் சுற்றி நிகழும் கதை.

திருப்பூர் தான் கதைக்களம் என்றவுடன் சாயக்கழிவுகளினால் ஏற்படும் மோசமான நிலைகள் நம் கண் முன்னே வந்துவிடும்.
எத்தனையோ திரைப்படங்கள் கூட இதைப் பற்றி பேசிஇருந்தாலும் தீர்வு ஒரு கேள்விக்குறியே. வளர்ச்சி என்ற பெயரில் அடித்தளத்தை இழந்து நம் உலகம்  ஆட்டம் கண்டுள்ளது.

  மணியன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி,மகள் தேனம்மை, ஆய்வு மாணவி ஜூலியா என்பவர்களின் பார்வையில் மணியனைப் பற்றியும், அவரின் போராட்டங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

 ஸ்பின்னிங் மில்களில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தருகிறது.ஆனால் இந்தத் திட்டத்தில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பயிற்சி என்ற பெயரில் மூன்று மாதங்கள் சம்பளமில்லாமல் வேலை பார்ப்பது,இயந்திரத்தில் கை விரல்களை இழப்பது,இழப்பீடு கிடைக்காமல் தவிப்பது எனப் பலவற்றைக் கதை ஓட்டத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.

சுற்றுச்சூழல் கேடு சீனாவில் அதிகமாகி விட்டதால், பனியன் உற்பத்தி நமக்கு அதிகம் கிடைக்கும் என்று முதலாளிகள் கூட்டத்தில் மகிழ்ச்சியோடு  பேசுவது வணிக சிந்தனை பூமித்தாயை எப்படி அழிக்கிறது என்பதைக் காட்டும் ஒரு இடம்.

சாயப் பட்டறைகளின் கழிவு நொய்யல் ஆற்றில் கலந்து விடுவது, பயணத்தில் சாமளாபுரம் குளம் பெரியாண்டிபாளையம் குளம் ஆகியவை நீரின்றி காய்ந்து போய் மணற்பரப்பாக ஏக்கர் கணக்கில் விரிந்திருப்பது,ஆற்று மணலுக்காக போராடி உயிர் கொடுத்தவரின் இடத்தைச் சென்று பார்ப்பது என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓரிரு வரிகளில் இயற்கை அழிப்பைப் பற்றி பேசினாலும் அது நம் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமாகவே உள்ளது.

 கென்சரோ விவாவின் கவிதை வரிகள் அதற்கு அழுத்தம் சேர்க்கின்றன.
உதாரணமாக..
// இயற்கைக்கு விரோதமானவைகளே இன்று நம் நிலத்தை ஆள்கின்றன.
....
.. மறுபடியும் இதை நாம் இயற்கையானதாக்க வேண்டும். நமது பாடல்களின் மூலம் ,
நமது அறிவார்ந்த சீற்றத்தின் மூலம்//.

இறுதியில் மணியன் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு அளித்த நினைவுச் சின்னம் சுற்றுச்சூழல் பணிக்காக.. என்ற பெயருடன் பழைய புத்தகக் கடையில் ஆல்பர்ட் பார்ப்பதும், அவருக்கு 'எழுச்சி' அமைப்பின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதோடும் கதை முடிகிறது.. யதார்த்த உலகின் நிதர்சனத்தை காட்டுகிறது.

//நான் விதையிட்டு போகத் தயாராகிறேன். விதைகளை தொடர்ந்து விதைக்க வேண்டியது உங்கள் கடமை நீங்கள் தான் ரட்சகன்// என்று கேரளாவின் ஜான்சி ஜாக்கப்பின் கடித வரிகள் ஒரு அத்தியாயத்தில் இடம்பெறும். அதைப் போலவே சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வரும் எதிர்கால சந்ததியும் போராடி, வெற்றி பெறும் என நம்பிக்கை கொள்வோம்.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முகப்பில் இருளர் கவிதை வரிகள் (ஒடியன் லட்சுமணன்) சாட்டை வரிகள்.
 
 சாயக்கழிவுகளால் வளம் மிகுந்த நம் மண் மாறி, அங்கு வாழும் மக்களுக்கு புற்றுநோயை கொண்டு வருவதால் 'புத்துமண்'  என்று பெயர் வைத்தாரா ஆசிரியர் என்று தெரியவில்லை.
சீரான கதையோட்டமாக இல்லாமல் , புதுமையான அமைப்பில் நாவல் இருந்தாலும் சுற்றுச் சூழலைக் காக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாகவே எடுத்துரைக்கிறது.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு